சென்னை: ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று இரு தரப்பினரும் உன்னை பாரு, என்னைப் பாரு என்ற போட்டா போட்டி போட்டுக் கொண்டு மக்களின் கவலைகளைப் பார்க்க மறந்து வருகின்றனர். மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசுக்கு அடி வயிற்றில் நெருப்பு எரிகிற போல நிலைமை. காரணம், அரசு நீடிக்குமா, ஆட்சி கவிழாமல் தப்புமா என்ற நித்தியகண்ட பூரணாயுசு சிச்சுவேஷன். தன் வீட்டில் நெருப்பு எரியும் போது ஒருத்தன் அதை அணைப்பானா சுற்றியுள்ள வீடுகளில் உள்ள நெருப்பை அணைக்க ஓடுவானா. இந்த கேள்விக்கான பதில் தான் இன்று தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் நிலைமை. ஆட்சிக்குள், அமைச்சரவைக்குள், அமைச்சர்களுக்குள், உள்கட்சிக்குள் என அவர்களுக்குள் நடக்கும் பூசலை சரி செய்வதற்கே அவர்கள் நேரம் சரியாக இருக்கிறது. அவர்கள் பூச பூச அங்கே ஓன்று இரண்டு ஓட்டைகள் வர மீண்டும் அவர்கள் பூச தொடங்க என்று அவர்கள் நேரமும் கவனமும் அதிலேயே போய்விடுகிறது. இதில் இவர்கள் மக்களின் குறைகளை பார்க்க நேரம் இருக்குமா என்ன. அந்த ஓட்டை உடைசல்களை பூசிக் கொண்டிருந்தால் இவர்கள் மக்களுக்கு என்று புது வீடெல்லாம் (திட்டங்கள்) கட்டுவது என்பது சாத்தியமாகுமா, ஏன் ஒரு சுவரை கட்டுவது கூட கேள்விக்குறி தான்